திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: படுக்கையில் இருந்த மூதாட்டியின் விரலைக் கடித்த எலி!
திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: படுக்கையில் இருந்த மூதாட்டியின் விரலைக் கடித்த எலி!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க்கொடி (60) என்பவரே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவராவார். இவர் எலும்பு மூட்டு சிகிச்சைக்காகக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தங்கியிருந்த மருத்துவ வார்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மூதாட்டியின் படுக்கைக்குச் சென்ற எலி ஒன்று அவரது கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. வலியால் துடித்த மூதாட்டியின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மருத்துவக் குழுவினர், அவருக்கு உடனடிப் பரிசோதனை மேற்கொண்டு தேவையான தடுப்பூசிகளைச் செலுத்தினர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் விஜயகுமார் கூறுகையில், “அரசு மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை. என் தாயாருக்குச் சர்க்கரை நோய் இருப்பதால், எலி கடித்தது உடனடியாக அவரது கவனத்திற்குத் தெரியவரவில்லை. தற்போது அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் அசம்பாவிதத்திற்கு மருத்துவமனை நிர்வாகமே முழுப் பொறுப்பேற்று, இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க உடனடியாக எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை வார்டிலேயே நோயாளிக்கு எலி கடித்த சம்பவம், அங்கு சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Trichy #TrichyGH #RatBite #GovernmentHospital #TamilNaduNews #TrichyNews #MedicalNegligence #BreakingNews





Comments are closed.