முதல்வர் கோப்பை 2026! துப்பாக்கி சுடுதல் போட்டியில் மர்ம தாமதம்! திருச்சியில் மட்டும் என்ன குளறுபடி? தவிக்கும் வீரர்கள்!
முதல்வர் கோப்பை 2026! துப்பாக்கி சுடுதல் போட்டியில் மர்ம தாமதம்! திருச்சியில் மட்டும் என்ன குளறுபடி? தவிக்கும் வீரர்கள்!

திருச்சி:

தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் ‘முதல்வர் கோப்பை 2026’ (Chief Minister’s Trophy) மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் 45 வகையான விளையாட்டுகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சுடுதல் (Gun Shooting) போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குத் தேர்வாகும் கனவோடு களம் இறங்கியுள்ள இந்த வீரர்களின் உழைப்பிற்கு, திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் (Gun Shooting) போட்டியின் நிர்வாகக் குளறுபடி பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் உடனுக்குடன்… திருச்சியில் மட்டும் 2 நாள் இழுத்தடிப்பு ஏன்?
துப்பாக்கி சுடுதல் போட்டியைப் பொறுத்தவரை, இலக்குகளில் பதிவாகும் புள்ளிகள் உடனடியாகக் கணக்கிடப்பட்டு, போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே அல்லது அன்றைய தினமே மதிப்பெண் விவரங்கள் மற்றும் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். தமிழகத்தின் பிற மண்டல மையங்களிலும் இவ்வாறே வெளிப்படையாக முடிவுகள் உடனுக்குடன் பலகையில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால், திருச்சியில் மட்டும் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் முடிந்து இரண்டு நாட்களாகியும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. “போட்டி முடிந்துவிட்டது; ஆனால் நாங்கள் பெற்ற மதிப்பெண் என்ன, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளோமா என்பது தெரியாமல் இரண்டு நாட்களாக நகம் கடித்துக் காத்துக் கிடக்கிறோம்” எனப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
குளறுபடியா? முறைகேடா? பெற்றோர்கள் சந்தேகம்!
துப்பாக்கி சுடுதல் போன்ற நேரடிப் புள்ளிகள் கொண்ட விளையாட்டில், முடிவுகளை இரண்டு நாட்கள் ரகசியமாக வைத்திருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா, மதிப்பெண்களைத் திருத்தி தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்யும் முறைகேடு நடக்கிறதா என்ற கடுமையான சந்தேகம் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முடிவுகள் உடனடியாகத் தெரிந்தால்தான் அடுத்தடுத்த சுற்றுகளுக்கும், மாநில அளவிலான இறுதிப் போட்டிக்கும் வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய காலதாமதம் வீரர்களின் மன உறுதியைக் குலைப்பதுடன், ஒட்டுமொத்தப் போட்டியின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகிறது.
அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும்!
விளையாட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய திருச்சி மண்டல விளையாட்டு அலுவலர்களும், SDAT உயர் அதிகாரிகளும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியலை எவ்வித தாமதமும் இன்றி வெளிப்படையாக உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், வருங்காலப் போட்டிகளில் போட்டி முடிந்த உடனேயே மதிப்பெண்கள் அறிவிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.

#CMTrophy2026
#ChiefMinistersTrophy
#TrichySports
#SDAT
#SDATTamilNadu
#ShootingCompetition
#GunShooting
#SportsScandal
#TrichyNews
#TamilNaduSports
#JusticeForAthletes
#SportsTransparency
#TamilNaduAthletes
#CMTrophyDelay
#TrichyAdministration





Comments are closed.