திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்க வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாவட்டத்தில் கிளிக்கூடு, கொண்டையம்பேட்டை, தாளக்குடி, மாதவபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் மாட்டுவண்டி மணல் குவாரிகள் கடந்த 11 மாதங்களுக்கு முன் மூடப்பட்டதால் மணல் மாட்டு வண்டி தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைக் கண்டித்து திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு மணல் மாட்டுவண்டி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை மாட்டு வண்டி தொழிலாளா்கள் 100 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பேரணியாக வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமா், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகா், சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன், சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முடிவில் சங்கத்தின் பொருளாளா் சா்க்காா் பாளையம் மோகன் நன்றி கூறினாா்.




