அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-

ஈரோடு மக்கள் சந்திப்பில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை :

மஞ்சள் ! மஞ்சள் ! பொதுவாக நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு, மஞ்சளை எடுத்து வைத்துதான் தொடங்குவார்கள். நம் வீடுகளில் கூட நம் தாய்மார்கள், சகோதரிகள் நமக்காக, நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் புடவை அணிந்துதான் வேண்டிக்கொள்வார்கள். மஞ்சள் என்றாலே ஒரு தனி அதிர்வுதான். நம் கொடியில் கூட அந்தத் துடிப்பான, ஆற்றல்மிக்க மஞ்சள் நிறம் உள்ளது. அந்த மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான், இந்த ஈரோடு பூமி.

இங்கு வந்து மஞ்சளைப் பற்றிப் பேசாமல் வேறு எங்கு சென்று பேசுவது? அதுமட்டுமல்லாமல், இங்கு ஒரு மகத்தான மனிதரைப் பற்றி நாம் பேசியே ஆக வேண்டும். இந்த ஈரோடு மண், விவசாயத்திற்கும் பெயர் பெற்ற மண். இங்கு நடைபெறும் விவசாயத்திற்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை, காலிங்கராயன் கால்வாய். காலிங்கராயன் அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உயிரான, உணர்வுப்பூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அந்தப் பணியின்போது அவர் அணை கட்டும்போதும், கால்வாய் வெட்டும்போதும் மிகவும் சோர்வடைந்துவிட்டார். அப்போது அவரது தாயார் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார், “மகனே காலிங்கா, தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது, மோர் விற்ற காசு முகடு வரை இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் அணையை கட்டு, கால்வாயை வெட்டு” என்று கூறித் தைரியம் கொடுத்தார். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்தைத் தாண்டி வேறு எதுவுமே கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.

இப்போது நீங்கள் என்னுடைய தாய்மார்கள், சகோதரிகள், நண்பா, நண்பிகள், தோழர்கள் அனைவரும் எனக்கு அதே தைரியத்தைக் கொடுத்துள்ளீர்கள். அதே துணையாக என்னுடன் நிற்கிறீர்கள். இதைப் எப்படி பிரித்து விடலாம், இதை எப்படி கெடுக்கலாம், என்னவெல்லாம் அவதூறுகள் விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் விஜய் மீது செய்து மக்களை நம்ப வைக்கலாம் என சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் சில சூழ்ச்சிக்காரக் கூட்டங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. இது இன்று, நேற்று வந்த உறவு அல்ல. ஏறக்குறைய 30, 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் உறவு. நான் திரைத்துறைக்கு வந்த 10 வயதிலிருந்தே இந்த உறவு தொடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால் என்ன செய்தாலும், நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கும் இந்த விஜய்யை… இந்த விஜியை மக்கள் ஒரு நாளும் கைவிடமாட்டார்கள். மக்கள் கூடவே நிற்கிறார்கள், கூடவே நிற்பார்கள் என அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. என்ன நிற்பீர்கள் அல்லவா? உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். இந்த சத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்.

Bismi

நம் காலிங்கராயன் அவர்கள் அணையைக் கட்டுவதற்காக பவானிக்குச் சென்று பார்க்கும்போது, ஒரு இடத்தில் பாம்பு வந்து படுத்த இடத்தில்தான் அவர் அணையைக் கட்டத் தொடங்கினார். பிறகு அந்தப் பாம்பு வளைந்து நெளிந்து செல்லும் இடங்களிலெல்லாம் கால்வாயை வெட்டினார் என சில வாய்மொழிக் கதைகள் எல்லாம் கூறுகிறார்கள். நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் வழிவகுப்பது எவ்வளவு பெரிய நல்ல விஷயம். ஆக, இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செய்துவிட்டு கதைகள் கூறினால் பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டும் அள்ளி விடுகிறார்கள். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால் அந்த மூன்று மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏன் அதெல்லாம் செய்ய மறுக்கிறீர்கள்? வள்ளுவர் கோட்டத்திற்குக் காட்டும் அக்கறையை இங்கு மக்கள் வாழ்வாதாரத்திற்கும் கொஞ்சம் காண்பிக்கலாம். ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? இங்கே அரசாங்கம் நடத்துகிறார்களா இல்லை கண்காட்சி நடத்துகிறார்களா? இந்த 21-ஆம் நூற்றாண்டிலேயே மக்களைப் பற்றி எதுவுமே யோசிப்பது இல்லை. ஆனால் அந்தக் காலத்திலே மக்களைப் பற்றி, குடிக்கும் நீரைப் பற்றி, விவசாயத்தைப் பற்றி, அணை கட்டுவதைப் பற்றி, கால்வாய் வெட்டுவதைப் பற்றி, பவானியில் இருந்து நொய்யலாறு வரை கால்வாய் வெட்டி இது எல்லாவற்றையும் பற்றி யோசித்த காலிங்கராயன் அவர்களுக்குக் கோடி நன்றிகள் கூறினாலும் போதாது.

அந்தக் காலத்தில் இருந்த ஒரு தலைவரைப் பற்றிப் பேசிவிட்டு, இந்தக் காலத்தில், அதாவது 19, 20-ஆம் நூற்றாண்டில் இருந்த தலைவரைப் பற்றியும் நாம் பேசி ஆக வேண்டும். ஒருவர் இளகிய மனம் கொண்டவர் என்றால், இன்னொருவர் இரும்பு மனிதர் போன்றவர். ஆம், நமது ஈரோடு கடப்பாரை தான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட சமூக சீர்திருத்த நெம்புகோல்.

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த அவர்தான், இந்தியாவிற்கே இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்காகப் போராட்டம் நடத்தியவர். அவர்தான் தந்தை பெரியார்.100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டவர். அன்றும் சரி, இன்றும் சரி ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடிய மனிதர். நம்முடைய கொள்கைத் தலைவர். அப்படி என்றால் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் யார்? என கேட்கிறார்கள். பெரியார் அவர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். அவரைப் பின்பற்றிய, அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா அவர்களிடமிருந்தும், எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம்.

அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் யாரும் இங்கு அழுது கொண்டிருக்க முடியாது என சொல்லிவிட்டேன். நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத்தான் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லை அல்லவா, பிறகு ஏன் கதறுகிறீர்கள்? எங்கு சென்றாலும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்குப் பயம் இல்லை என சத்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு, நடுங்கிக்கொண்டே செல்லும் சிறு பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள். முதலில் தலையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள். ஊடக ஆட்கள், வானொலி ஆட்கள் என்று இவர்களுடைய ஆட்களையே மாற்றி மாற்றி அனுப்பி வைத்துக்கொண்டு, இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம் தான் துணை. ஆனால் எனக்கு, என் மீது எல்லையில்லா பாசம் வைத்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் துணை. இப்படி நமக்குத் துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறேன்.

இவ்வளவு செல்வாக்கு, இவ்வளவு பதவிகள், இவ்வளவு அதிகாரம் இருந்தும் நான் ஐந்து பைசா காசு சம்பாதித்து இருப்பேனா? எனக்கோ அல்லது என் குடும்பத்துக்கோ பட்டங்கள் வேண்டும், பதவி வேண்டும் என்று ஏதேனும் கேட்டிருப்பேனா? இல்லை ஏதேனும் இலாபம் பார்த்திருப்பேனா? இல்லை எதற்காவது ஆசைப்பட்டிருப்பேனா? என்று கூறிய பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு, அவரது கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள். அவர் பெயரைக் கூறிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள் . பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை.

அதனால் தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. எத்தனை, எத்தனை பொய்யான வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வை ரத்து செய்வோம். கல்விக் கடனை ரத்து செய்வோம். கேஸ் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என பொய்யான வாக்குறுதிகளையே கொடுத்துள்ளார்கள். இவற்றையெல்லாம் சொன்னார்களே, செய்தார்களா? இவர்கள் எப்பொழுதுமே இப்படித்தான், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. திமுகவும் பிரச்சனைகளும் பசை போட்டு ஒட்டிய நண்பர்கள் மாதிரி, ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது.

ஈரோடு பகுதியில் உள்ள பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம். பெரியார் பெயரை மட்டும் கூறிக்கொண்டு, எப்படி அவரது கொள்கைகளுக்கு எதிராகவே செயல்படுகிறார்களோ, அதுபோலத்தான் இந்த மஞ்சள் நகரத்தின் மஞ்சளுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆராய்ச்சி மையம், சிறப்பு மையம் என்று கோடி கோடியாக ஒப்பந்தம் விட்டார்கள். பெயருக்குக் கட்டிடத்தைக் கட்டியுள்ளார்கள். ஆனால் உலகமே போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் மஞ்சளின் மதிப்பை உயர்த்தி நம் விவசாயிகளுக்கும், இந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்ய இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ஒரு பெரிய பூஜ்யம் தான்.இவ்வாறு விஜய் கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்