”மக்களுக்காகவே இந்த விஜய்!” – கரூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உணர்ச்சிப்பூர்வமான உரை!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நெகிழ்ச்சியுடனும் அதே வேளையில் அரசியல் எதிரிகளுக்கு அதிரடியான பதிலடி கொடுக்கும் வகையிலும் உரையாற்றினார். அவரது உரையின் முக்கியத் தொகுப்பு இதோ:
மறக்க முடியாத கரூர் சம்பவத்தின் வலியும், அரசியல் நாடகமும்

என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும், மனதளவில் ஏற்பட்ட சில வலிகளையும் காயங்களையும் அவனால் எளிதில் மறந்துவிட முடியாது. எல்லோர் வாழ்க்கையையும் போலத்தான் எனக்கும் பல வலிகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றையும் விடப் பெரிய காயத்தை ஏற்படுத்தியது அந்த “கரூர் சம்பவம்தான்”.
மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பதற்காகவே நாம் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் எனப் பயணத்தைத் தொடங்கினோம். அரியலூர் கூட்டம் முடிந்து பெரம்பலூர் செல்லும் வழியில், கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று காவல்துறை எச்சரித்ததால், மக்களின் பாதுகாப்பைக் கருதி மிகுந்த மனவேதனையுடன் அன்று பயணத்தைத் தவிர்த்தோம்.
”ஆனால், நாமக்கல் முடித்து கரூர் வந்தபோது இதேபோல் காவல்துறை எச்சரித்திருக்கலாம் அல்லவா? கூட்டம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது, வராதீர்கள் என்று தடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல், எங்களை நேராக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதன் பின்னணியில் இருந்த நாடகத்தை நான் முழுமையாக நம்பிவிட்டேன். இந்த சதிக்குக் காரணம் யார்? இதன் பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தது யார்?”
அன்று நடந்த சம்பவத்தில் என் அக்கா, தங்கைகளின் பச்சைக் குழந்தைகளை, இன்னும் மழலை மாறாத கள்ளமில்லாச் சிரிப்பைக் கொண்ட பிஞ்சுகளை நாம் இழந்திருக்கிறோம். அந்த வலியோடு வீட்டில் இருக்கும் என்னை நோக்கி, ‘ஓடி ஒழிந்துவிட்டான்’ என ஏளனமாகப் பேசுகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நடந்த அரசியல் சதியை எதிர்காலத் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) சார்பில் கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
திமுக-வின் ஊழல்களும் கழன்ற முகமூடிகளும்
நடந்த சம்பவங்களுக்கு நம் மீது பழியைப் போட்டுவிட்டு, சட்டமன்றத்தில் வாய் கூசாமல் முந்தைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசியல் செய்கிறார். பணமா, ஜனமா என்று கேட்டால், எனக்கு எப்போதுமே என் ஜனம்தான் முக்கியம்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பார்ட்டி ஃபண்ட் (கட்சி நிதி) என்ற பெயரில் கொள்ளையடித்து வருகின்றன. சட்டமன்றத்தில் நான் இதைக் குறிப்பிட்டதும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல அவர்கள் ஓட்டம் பிடித்தனர். சென்னையில் பாலம் கட்டுவதற்காக, வழக்கமான தொகையை விட இரட்டிப்பு மடங்கு செலவில் விடப்பட்ட டெண்டரை நமது அரசு இப்போது தோண்டி எடுத்து ரத்து செய்துள்ளது. தோண்டத் தோண்ட இவர்களின் ஊழல் முகமூடிகள் கிழிந்து வருகின்றன. இவர்களின் கரூர் கம்பெனி ஓனர் ஒருவரும், சிங்கப்பூருக்குச் செக்கப் என்று சென்ற மற்றொருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!
55 நாட்க கால ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகள்

நமது டிவிகே அரசு பொறுப்பேற்ற இந்த 55 நாட்களில் பல்வேறு அதிரடி மக்கள் நலத்திட்டங்களையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் கொண்டு வந்துள்ளது:
மின்சாரத் துறை ஊழல் ஒழிப்பு: மின்சாரத் துறையில் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் தேங்கிக் கிடந்த பதவி உயர்வுகள் தற்போது எவ்வித லஞ்சமும் இன்றி வழங்கப்பட்டுள்ளன.
லஞ்சமில்லா அரசு அலுவலகங்கள்: அரசு அலுவலகங்களில் தற்போது ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் வேலைகள் உடனுக்குடன் நடக்கின்றன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
பிரம்மாண்ட முதலீடுகள்: ‘எல் அண்ட் டி’ (L&T) நிறுவனத்துடன் 18,600 கோடி மதிப்பில் மூன்று முக்கியத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்: குறுவை சாகுபடிக்காக ₹134 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பாதுகாப்பு & நலன்: பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தாய்மார்களுக்காக ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.
மாநில உரிமைகளும் மேகதாது அணை விவகாரமும்
விஜய்க்கு அரசியல் பேசத் தெரியவில்லை, மேகதாது அணை பற்றி ஏன் பேசவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். மேகதாது அணை வழக்கில் தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்? ஏன் ஒழுங்காக வாதாடவில்லை?
நாங்கள் வெற்றுச் சவால்களை விட்டு, பிரச்சனையை வளர்க்கும் அரசியல்வாதிகள் அல்ல. “டாக் லெஸ், வொர்க் மோர்” (Talk Less, Work More) என்பதே நமது பாலிசி. அதனால்தான் சட்டமன்றத்தில் உரிய அரசினர் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். அதேபோல், மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிடும் ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. நமக்கான இடத்தை யாராலும் பறிக்க முடியாது; அதற்குக் டொடுக்கவும் மாட்டோம்.
நிறைவுரை
”தேர்தலில் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரத்தை உடைத்தெறிந்த பெருமை நம்மைக் சாரும். முந்தைய திமுக ஆட்சியைப் போல் நாம் வெற்று விளம்பரங்கள் செய்ய மாட்டோம். இந்த தீய சக்திகளுக்கு 2026 தேர்தலில் நீங்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளீர்கள். ஆனால், அதுமட்டும் போதாது; இனி அவர்களால் எழவே முடியாதபடி நிரந்தரப் பதிலடியை வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் நீங்கள் வழங்க வேண்டும். இந்த விஜய் உங்களுக்காக மட்டுமே உழைப்பான். வெற்றி நிச்சயம்!”
#CMVijay #KarurSpeech #TVKGovernment #JosephVijay #TamilNaduCM #CorruptionFreeTN #TVKChiefMinister





Comments are closed.