சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி
சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. நேற்றுடன் லீக் முடிவடைந்தன. ‘பி’ பிரிவின் இறுதி லீக்கில் இந்தியா- சுவிட்சர்லாந்து அணிகள் மதுரையில் நேற்றிரவு போட்டி போட்டனார் . மழையால் சற்று தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வரிந்து கட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு முதல் பாதியில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். பிற்பாதியில் மேலும் ஒரு கோல் திணித்தனர். முடிவில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது. அதே சமயம் சுவிட்சர்லாந்து 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெளியேறியது. இதே போல 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி (ஏ பிரிவு), 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகிய அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. 2-வது இடத்தை பிடித்த சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து (சி பிரிவு), பெல்ஜியம் (டி) ஆகியவையும் தகுதி பெற்றன. இன்று ஓய்வு நாளாகும். ரேங்கிங் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. கால்இறுதி போட்டிகள் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இந்திய அணி கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நியூசிலாந்து மதியம் 12.30 மணி, ஜெர்மனி-பிரான்ஸ் மாலை 3 மணி, நெதர்லாந்து-அர்ஜென்டினா மாலை 5.30 அணிகள் மோதுகின்றன. 17 முதல் 24 இடங்களுக்கான போட்டி நாளை நடக்கிறது. மதுரையில் நடைபெறும் ஆட்டங்களில் நமீபியா-ஆஸ்திரியா காலை 9 மணி, வங்காளதேசம்-ஓமன் காலை 11.30 மணி, தென்கொரியா-எகிப்து பிற்பகல் 2 மணி, சீனா-கனடா மாலை 4.30 மணி அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-சிலி பிற்பகல் 12.30 மணி, தென் ஆப்பிரிக்கா-மலேசியா மாலை 3 மணி, சுவிட்சர்லாந்து-அயர்லாந்து மாலை 5.30 மணி, ஆஸ்திரேலியா-ஜப்பான் இரவு 8 மணி அணிகள் மோதுகின்றன.


Comments are closed.