திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘சோழன் நியூஸ்’ செய்திக்கு கிடைத்த அதிரடி பலன்: போலீஸ் தடுப்புகளில் ஒட்டப்பட்ட ஒளிரும் ஸ்டிக்கர்கள்! ஆனால், புத்தூர், தில்லைநகர் சாலைகளுக்கு ‘பஞ்சர்’ ஒட்டுவது எப்போது? – சமூக ஆர்வலர்கள் பரபரப்பு கோரிக்கை!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘சோழன் நியூஸ்’ செய்திக்கு கிடைத்த அதிரடி பலன்: போலீஸ் தடுப்புகளில் ஒட்டப்பட்ட ஒளிரும் ஸ்டிக்கர்கள்! ஆனால், புத்தூர், தில்லைநகர் சாலைகளுக்கு ‘பஞ்சர்’ ஒட்டுவது எப்போது? – சமூக ஆர்வலர்கள் பரபரப்பு கோரிக்கை!
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைத்துள்ள அபாயகரமான தடுப்புகள் மற்றும் கண்பார்வையை மறைக்கும் விளக்கு வெளிச்சம் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு ‘மரணப் பொறியாக’ மாறியுள்ளது குறித்து ‘சோழன் நியூஸ்’ இணையதளத்தில் அதிரவைக்கும் புகைப்பட சான்றுகளுடன் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது செய்தியின் எதிரொலியாக மற்றும் தீவிர பொதுநலன் கருதி, ஸ்ரீரங்கம் போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஸ்ரீரங்கம் பகுதியில் நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள ‘திருச்சி மாநகர காவல்’ தடுப்புகளில் (Barricades) வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான ஒளிரும் (மின்னும்) ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன

இதன் மூலம் தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த தடுப்புகள் தெளிவாகத் தெரிவதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் நடப்பது ஓரளவுக்கு தவிர்க்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
தொடரும் அவலங்கள் – இன்னும் தீராத புத்தூர், தில்லைநகர் சாலைப் பிரச்சினைகள்:

ஸ்ரீரங்கத்தில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நாம் குறிப்பிட்டிருந்த புத்தூர் மற்றும் தில்லைநகர் வரையிலான சாலைகளின் அவல நிலை இன்னும் அப்படியே நீடிக்கிறது. குண்டும் குழியுமாக காட்சி தரும் இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால்:
“இருசக்கர வாகனங்களின் டயர்களில் ஓட்டை விழுந்தால் பஞ்சர் ஒட்டுவது போல, திருச்சி மாவட்டத்தின் மிக முக்கிய சாலைகளாக விளங்கும் புத்தூர், தில்லைநகர் மற்றும் நாம் சுட்டிக்காட்டியுள்ள பிற பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளுக்கு தற்காலிகமாகவாவது ‘பஞ்சர்’ ஒட்டி (Patchwork) உடனடியாக சீரமைத்துக் கொடுத்தால், வாகன ஓட்டிகள் அச்சமின்றி, எளிமையாக கடந்து செல்ல உதவியாக இருக்கும்.”
அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அவசர கோரிக்கை:
எனவே, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும், திருச்சி மாநகராட்சியும் இணைந்து இந்த சாலைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருதி, திருச்சி மாவட்ட சாலைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சோழன் பார்வை செய்தி ஆசிரியர்
#TrichyNews #SrirangamTrafficPolice #TrichyHighways #CholannewsImpact #PutturTrichy #Thillainagar #TrichyCorporation #RoadSafety #TrichyCollector #PublicIssue #ActionTaken #TamilNaduNews





Comments are closed.