பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தமிழ்நாடு அரசு 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ₹.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.
திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள தமிழக அரசின் நீா்வளத்துறை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு சங்கத்தின் மாநிலத்தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இந்த பேரணியில் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னா் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்….
விவசாயிகளை தாக்கிய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். துறையூா், முசிறி பகுதிகளில் பாய்ந்தோடும் அய்யாறு துணை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு எதிராகவும், வேளாண் சாகுபடிக்கு முரணாகவும் வருவாய் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பக்கப்பட்டிருப்பதை திரும்பப் பெற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுத்துள்ள கா்நாடக அரசு மீது நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும். தமிழ்நாடு அரசு 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ₹.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.