திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் நெகிழி நீக்கம்,நதிநீர் மேலாண்மை பற்றிய, சிறப்புக் கருத்தரங்கம்!
திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் நெகிழி நீக்கம்,நதிநீர் மேலாண்மை பற்றிய, சிறப்புக் கருத்தரங்கம்!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம்- ஆகியன இணைந்து, நெகிழி நீக்கம், நதிநீர் மேலாண்மை குறித்த பயிலரங்கம், சங்கர் நகர் சங்கர் மேனிலைப்பள்ளியில், இன்று (செப்டம்பர். 4) நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ஆ. ரெங்கநாதன் தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படையின் உதவித்திட்ட அலுவலர் ச.தனலட்சுமி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் சொ. உடையார், முன்னிலை வகித்தார். “இயற்கையோடு இயைந்த வாழ்க்கை இன்பம் தரும்!” என்ற தலைப்பில், பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திட்ட அலுவலர் “முனைவர்” கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, “நெகிழி இல்லா தமிழ்நாடு!” என்கிற தலைப்பில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையைச் சார்ந்த, “சுற்றுச்சூழல் அறிஞர்” டாக்டர் முத்துக்குமார் நோக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து “எக்ஸ்னோரோ” நதிநீர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கற்பகம் சோமசுந்தரம், நதிநீர் மேலாண்மை குறித்தும், தாமிரபரணி நதியின் பாதுகாப்பு குறித்தும், விளக்கமாக பேசினார்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் செல்வன் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ- மாணவியர் பெருந்திரளாக, கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிறைவாக, குடிமக்கள் நுகர்வோர் மன்ற உதவித்திட்ட அலுவலர் லேகா, நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறையைச் சார்ந்த டாக்டர் முத்துக்குமார் பேசியதாவது:-
“40 மைக்ரானுக்கும் குறைந்த, ஒருமுறை பயன்படுத்திடும் நெகிழிகளை, கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. இதனால், அதிக அளவில் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மழை நீர் உள்ளே செல்லாத நிலையில், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியனவும் பாதிக்கப்படுகின்றன. பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட, இந்த நெகிழியானது மக்கி, மண்ணோடு மண்ணாக கலப்பது கிடையாது. இதனால் பல்வேறு பாதிப்புகள், தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் ஏற்படுகின்றன. ஆகவே, நமது வாழ்விலே, நெகிழியை நீக்கி, வருங்கால சந்ததியினருக்கு, இயற்கையான சூழ்நிலையை, உருவாக்கி கொடுக்க வேண்டும். நெகிழி பைகளிலே சூடாக காபி, உணவுப் பொருட்களை வாங்கினால், பிற்காலத்தில் அவர்களுக்கு புற்றுநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவவே, உணவகங்களுக்கு நாம் செல்லும்போது, கண்டிப்பாக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, பாத்திரங்களை கொண்டு செல்ல வேண்டும். காய்கறி போன்ற கடைகளுக்கு செல்லும் போது, மஞ்சப்பைகளை கொண்டு செல்ல வேண்டும். பைகளை கொண்டு போவதோ, பாத்திரங்களை எடுத்துப் போவதோ, ஒன்றும் கவுரவக்குறைவு அல்ல. நம்முடைய ஆரோக்கியத் திற்காகவும், நாட்டினுடைய நலனுக்காகவும் பையையும், பாத்திரங்களையும் கொண்டு சென்று பொருட்கள், பெற்று வருவோம்! என்னும் உறுதிமொழியை, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் .நெகிழி இல்லா தமிழ்நாடு உருவாக, அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்!”- இவ்வாறு, அவர் பேசினார்.
“எக்ஸ்னோரோ” அமைப்பின் பொறுப்பாளர் கற்பகம் சோமசுந்தரம் பேசியபோது,
“தாயைப் போல நதிகளைப்பாதுகாக்க வேண்டும். கழிவுப் பொருட்களை, ஆற்றில் கொண்டு போய் கொட்டுகிற பழக்கக்கத்தை கைவிட வேண்டும்.நதி நீரிலே ஆடு மாடுகளை குளிப்பாட்டுவது, இருசக்கர- நான்கு சக்கர வாகனங்களை, கழுவுவது நதிநீரை மேலும் மாசுபடுத்தும். ஆலைக்கழிவு, கழிவு நீரோடை போன்றவையும், ஆற்று நீரில் கலக்காமல் பாதுகாப்பது அந்தந்த பகுதி மக்களுடைய தலையாயக் கடமை.
நதிநீரை பாதுகாத்து நாளைய தலைமுறையினருக்கு வழங்குவது நமது பொறுப்பு!” என்று, குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்





Comments are closed.