உப்புக் குடிநீரால் தொடரும் சிறுநீரகப் பாதிப்பு! 8 மாதங்களாகத் தூங்கும் மனு… இன்று மேலும் ஒருவர் பலி! கள்ளக்குறிச்சி கானாங்காடு கிராம மக்களின் வேதனைப் போராட்டம்
உப்புக் குடிநீரால் தொடரும் சிறுநீரகப் பாதிப்பு! 8 மாதங்களாகத் தூங்கும் மனு… இன்று மேலும் ஒருவர் பலி! கள்ளக்குறிச்சி கானாங்காடு கிராம மக்களின் வேதனைப் போராட்டம்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கானாங்காடு கிராமத்தில் குடிநீரில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு (Kidney failure) உள்ளாகி ஆண்டுதோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணக் கோரி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், மனு அளிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறைந்தபட்சம் குடிநீர் தரம் குறித்தோ அல்லது மக்களின் உடல்நிலை குறித்தோ கள ஆய்வு கூட நடத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் உப்புக் குடிநீரால் ஆண்டுக்கு 3 முதல் 5 பேர் வரை உயிரிழந்து வரும் அவல நிலை நீடித்து வந்த சூழலில், தற்போது மேலும் ஒருவர் சிறுநீரகப் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் கிராம மக்கள் கடும் சோகத்திலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.

இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த கிராமப் பொதுமக்கள், ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அதே கோரிக்கை மனுவை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குத் தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தங்களின் அவல நிலையை உணர்த்தும் வகையில், நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் ஒருமுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு முடிவு செய்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கானாங்காடு கிராமத்திற்கு உடனடியாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
கிராம மக்கள் அனைவருக்கும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
உப்புக் குடிநீரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த அரசு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
”எங்கள் உயிருக்கு எப்போதுதான் பாதுகாப்பு கிடைக்கும்? இந்த குடிநீர் பிரச்சனைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்?” என்பதே ஒட்டுமொத்த கானாங்காடு கிராம மக்களின் ஒரே கேள்வியாக உள்ளது. இனியாவது அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Kallakurichi #DrinkingWaterCrisis #SaveKanangadu #ContaminatedWater #KidneyDisease #PublicHealthAlert #TNdistricts #KallakurichiCollector #CMCellTamilNadu #TamilNaduGovernment #RuralIssues #DrinkingWaterShortage





Comments are closed.