“ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்”: திருச்சியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம்!
“ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்”: திருச்சியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம்!
திருச்சிராப்பள்ளி:
புவி வெப்பமயமாதலைத் தடுத்து எதிர்காலச் சந்ததியினரைக் காக்க, ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் ஒரு மரத்தை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அந்தநல்லூர் சீரா தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மற்றும் கதிர் ஒளி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.
சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை
நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் முதுகலை ஆசிரியருமான பாலசுப்ரமணி வரவேற்புரையாற்றினார். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க வட்டார தலைவரும் கதிர் ஒளி அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ருக்குமணி மற்றும் இயற்கை மருத்துவர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

”வீட்டுக்கொரு மரம் போதாது; ஆளுக்கொரு மரம் தேவை!”
நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான யோக ஆசிரியர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”புவி வெப்பமயமாதலைத் தடுத்து, பூமியைக் காப்பாற்ற ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய இன்றியமையாத கடமை ஆளுக்கொரு மரம் வளர்ப்பதாகும். ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற காலம் மலையேறி, இன்று ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டுப் பராமரிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம். மனிதனின் பேராசையால் காடுகள் அழிக்கப்பட்டு இயற்கையின் சமநிலை குலைந்து வருகிறது.
மரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சி பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வழங்குவதுடன், மேகங்களை ஈர்த்து மழை பொழியச் செய்கின்றன. நாம் அனைவரும் நமது பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போன்ற சுப தினங்களில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றைச் சொந்தக் குழந்தைகள் போலப் பாதுகாக்க வேண்டும். ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம், இயற்கையைக் காப்போம்’ என்ற உறுதிமொழியை ஏற்றுப் பசுமைப் பூமியை உருவாக்குவோம்.”
நிகழ்ச்சியின் நிறைவாக, பள்ளி வளாகத்தில் அனைவரும் இணைந்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
#TrichyNews #PlantATree #SaveNature #NSSCamp #GreenEarth #LionsClubTrichy #AmirthamTrust #GoGreen #TreePlantation #TamilNews





Comments are closed.