காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய, சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! – அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதி!
காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய, சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! – அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதி!
திருநெல்வேலியில் துப்பாக்கி சூடு! பாப்பாக்குடியில், இரு தரப்பினரிடையே மோதல்!
தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய, 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! – திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதி!

திருநெல்வேலி மேற்கு மாவட்டம், முக்கூடலை அடுத்துள்ள “பாப்பாக்குடி” பகுதியில், இருதரப்பினருக்கு இடையே, திடீரென மோதல் ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, பாப்பாக்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் முருகனை, அரிவாளால் தாக்க முயன்ற 17 வயது சிறுவன் மீது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து, படுகாயமடைந்த சிறுவன், பாளையங் கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் முருகனுக்கும் காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மேற்கு மாவட்டம், முக்கூடல் பாப்பாக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே, நேற்று (ஜூலை.28) தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்.
அப்போது ஆத்திரத்தில் இருந்த சிறுவன், காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது, அரிவாளால் தாக்க முயன்றுள்ளான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் முருகன், தனது உயிருக்குப் பயந்து, தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்காக, அருகில் இருந்த ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்று, ஒளிந்து கொண்டதாகத் தெரிகிறது. அவ்வாறு கழிப்பறைக்குள்ளே, காவல்
உதவி ஆய்வாளர் முருகன் பதுங்கியிருந்த நிலையிலும், சிறுவன், ஆத்திரத்துடன் விடாமல் கழிவறையின் கதவை, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இந்தக் கொடூரச் செயலின் போது, கழிவறை கதவின் வழியாக ஏற்பட்ட தாக்குதலால் உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் முருகனுக்கு காயம் ஏற்பட்டது.
தொடர்ச்சியான தாக்குதலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலை உணர்ந்த உதவி ஆய்வாளர் முருகன், தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சிறுவன் வயிற்றுப் பகுதியை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில், குண்டு பாய்ந்து கீழே விழுந்த சிறுவன், உடனடியாகக் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை! என மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதலின் பின்னணி, சிறுவனின் செயல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான முழுமையான சூழ்நிலைகள் ஆகியன குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாப்பாக்குடி பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.





Comments are closed.