திருச்சி விமான நிலையத்தில் ஒருகிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து வியாழன் அதிகாலை திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரு பயணிகள் ₹.84 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இரு பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.