தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 17- ஆம் தேதி தொடங்குகிறது! முதல் நாளில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்! திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு பேட்டி!

திருநெல்வேலி, நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று (பிப்ரவரி.7) காலையில், செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(1) இன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை, 2026- ஆண்டு பிப்ரவரி திங்கள் 17- ஆம் நாள் செவ்வாய் கிழமை காலை 9-30 மணிக்கு, சென்னை-600 009 தலைமை செயலகத்தில் உள்ள, சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன். 2026-2027- ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை, 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17- ஆம் நாள் செவ்வாய் கிழமை காலை 9-30 மணிக்கு, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள், பேரவைக்கு அளிப்பார்கள். மேலும் 2026- ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20- ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 193 (1) இன் கீழ், 2026-2027- ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189 (1) இன் கீழ் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளும் (இறுதி) பேரவைக்கு அளிக்கப் பெறும். கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது? என்பதை, அலுவல்குழு கூடி முடிவு செய்யும்!”- இவ்வாறு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) திருநெல்வேலியில், செய்தியாளர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.