இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ.வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார். 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர். கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ. கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ. திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும். இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது. சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார். முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார். நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும். இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் .இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. போதைப்பொருளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரளவு பலன் கிடைத்துள்ளது. போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஒழிக்க முடியும்.
நாட்டின் எல்லைகள் வழியாக போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான போதைமாத்திரைகள் பிடிப்பட்டுள்ளது. போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போதையை புகழ்வது போன்ற காட்சிகளை எடுப்பதை ஏற்க முடியாது. இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். பிள்ளைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள். கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுகிறார்கள்.மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும், அவரது உடல் நிலை எங்களுக்கு பெரிது என்று பேசினார் .


Comments are closed.