திருச்சி செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் கல்வி கட்டணம் மூன்று மடங்காக திடீர் உயர்வு – பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் சாலை முல்லை நகர் பகுதியில் செயின்ட் ஜார்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்பொழுது இந்த பள்ளி நடத்துவதற்கு போதிய வசதி இல்லை என்பதால் இந்த பள்ளியை நாராயணா இ-டெக்னோ என்ற நிறுவனம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளியின் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 20 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 20 ஆயிரம் இருந்த பள்ளியின் கட்டணம் 80 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. பள்ளி கட்டணம் உயர்வு குறித்து எந்தவித முன்னறிவிப்பும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கூறவில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


மேலும் பள்ளிக் கட்டணத்தை கட்ட வேண்டும் என பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். மிக அதிகமாக கட்டணம் இருப்பதால் பள்ளி கட்டணத்தை எங்களால் செலுத்த இயலவில்லை,
எனவே பள்ளி கட்டணத்தை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.

