குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்சி பழூர் விஸ்வநாத சுவாமி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு – பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு!
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலுக்கா பழூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் இன்று நடைபெற்றது. சக்தியர், பீடம், ஆயுதம் போன்றவற்றுடன் நவக்கிரக நாயகர்கள் எழுந்தருளியுள்ள பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயில் நவக்கிரக தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
குரு பார்க்க கோடி நன்மை என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படிப்பட்ட குரு பகவான் இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனை முன்னிட்டு ரிஷப ராசியினர் மற்றும் குரு பகவான் பார்வை கொண்ட ராசியினர் தங்கள் கஷ்டங்கள், கவலைகள் குறைய வேண்டும் என இந்த நாளில் குருபகவானை வழிபாடு செய்தனர். மேலும் சனிபகவான் ஆதிக்கம் கொண்ட ராசியினரும் இந்த குரு பெயர்ச்சி மூலம் கஷ்டங்கள் கொஞ்சம் குறையும் என வழிபட்டனர்.
இதில் குருபகவானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குருபகவானுக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும்
குருபகவான் இடம் மாறுவதால் 12 ராசிக்காரர்களும் பரிகாரம் செய்வது நன்மை தரும். இந்த ஸ்தலத்தில் 9 வாரம் வியாழக்கிழமை வந்து வழிப்பட்டு சென்றால் குருப்பெயர்ச்சி நிவர்த்தி ஆகும் என கோவில் அர்ச்சகர் கௌரி சங்கர் தெரிவித்தார்.