வெளிப்படையான நிர்வாகம், பெண்களின் பாதுகாப்பு உறுதி! அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய்
வெளிப்படையான நிர்வாகம், பெண்களின் பாதுகாப்பு உறுதி! அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய்
சென்னை: தமிழகத்தில் வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடியாக அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுடனான மாநாடு இன்று முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த மிக முக்கியமான வழிகாட்டுதல்களை அவர் வழங்கினார்.

கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்:
சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு:
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படலாம்; தவறு செய்பவர்கள் எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பில் 100% சமரசமற்ற செயல்பாடுகள் தேவை. சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பில் அமலாக்க நடவடிக்கை மட்டுமின்றி, தேவை குறைப்பு (Drug Demand Reduction) நடவடிக்கையாக மறுவாழ்வு முகாம்களை அதிகரிக்க வேண்டும்.
எல்லையோர மாவட்டங்களில் போதைப்பொருள் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
மக்களுக்கான நிர்வாகம்:
”மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களைத் தங்கள் வீட்டின் உறுப்பினர்களைப் போல் கனிவுடன் நடத்த வேண்டும்.

திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்கு (Field Visit) அதிகாரிகள் கட்டாயம் செல்ல வேண்டும்.
நிலத் தகராறுகளைத் தீர்க்க மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழுக்களைச் சீரமைத்து, இருவாரங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க சோதனை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்க, அதிக விபத்து நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலாளர் நலத்துறை மூலம் அவர்களின் பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
டிஜிட்டல் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நிர்வாக வெளிப்படைத்தன்மை:
அரசுத் திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆய்வின்போது அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஊழலற்ற, லஞ்சமற்ற சேவையை உறுதி செய்வது ஒவ்வொரு ஆட்சியரின் கடமையாகும்.
சாதி பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த மாநாட்டின் மூலம், தமிழகத்தில் அரசின் சேவைகள் அடித்தட்டு மக்களையும் சென்றடைவதையும், சட்டம்-ஒழுங்கை உறுதி செய்வதையும் தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளதாக முதல்வர் விஜய் மீண்டும் ஒருமுறை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
#TamilNaduGovernment #CMVijay #AdminReview #LawAndOrder #WomensSafety #Governance #PublicService #TamilNaduNews





Comments are closed.