சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஆசிரியர்களை முசிறியில் நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் – மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு வீட்டுக்காவல்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் டிட்டோஜாக் சார்பாக சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் மற்றும் காரில் சென்னை செல்ல முயன்ற 4 பெண் ஆசிரியைகள், மற்றும் தனியார் சொகுசு பேருந்தில் சென்னை செல்ல முயன்ற இரண்டு பெண் ஆசிரியைகள் உள்பட ஏழு பேரை போலீஸார் அவர்கள் சென்ற வாகனங்களை வழிமறித்து கைது செய்தனர்.
பின்னர் ஆறு பெண் ஆசிரியைகளை சென்னை செல்லக்கூடாது என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தனியார் சொகுசு பேருந்தை முசிறி துறையூர் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் பயணிகள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கைக்குழந்தைகளை வைத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.