தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது – திருச்சி திருநங்கைகள் பெருமிதம்!
கல்வி இல்லாததால் திருநங்கைகள் வாழ்க்கை சிதறிப்போய் உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ள அரசு திமுக அரசு என திருச்சியில் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரி கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி திருநங்கைகள் கஜோல் மற்றும் பவித்ரா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

இன்றைக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷமான விஷயம் என்னவென்றால் திமுக அரசு திருநங்கைகள் உடைய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி என்ற ஒரு விஷயம் இல்லாததினால் தான் அவர்கள் வாழ்க்கை சிதறிப் போய் உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தினால் படிக்கக்கூடிய பொருளாதார வசதிகள் அவர்களுக்கு இல்லை. ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது.

தற்போது தமிழக அரசு அருமையான திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மருத்துவம், இன்ஜினியரிங் என எதுவாக இருந்தாலும் அவர்கள் படித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அதற்கு உறுதுணையாக இருக்கும் திமுக அரசுக்கு நல்ல பெயரை எடுத்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக படித்து கோல்ட் மெடல் வாங்க வேண்டும் என ஒட்டுமொத்த திருநங்கைகளின் ஆசையை நான் முன் வைக்கிறேன்.
திருநங்கைகளை பல பெயர்களை வைத்து அழைத்தார்கள். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திருநங்கை என்ற அருமையான பெயரை வைத்தார். அந்த பெயர் நல்ல மதிப்பு கொடுக்கக்கூடிய பெயராக இருக்கிறது. திருநங்கைகள் எல்லாரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது தனி காலம் கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அதையும் பதிவு செய்வதற்கு ஓ என்ற காலம் கொடுத்திருக்கிறார்கள்.
40 வயதிற்கு மேல் இருக்கும் திருநங்கைகள் மாதம் 1000 ரூபாய் பெற்று வந்தோம். திமுக அரசு வந்த பிறகு 1500 ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து திருநங்கைகளுக்கு பல நல்ல விஷயங்களை செய்து தருகிறார்கள்.
நாங்கள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு இருக்கிறோம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ளவர். அதேபோல் எங்கள் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருநங்கைகள் மீது மிகுந்த தனி அக்கறை செலுத்தி வருகின்றனர். இப்பொழுது வீட்டு மனை பட்டா கொடுத்து இருக்கிறார்கள்.
திமுக அரசு திருநங்கைகள் உடைய வாழ்க்கை மேம்பட நிறைய உதவிகள் செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட திருநங்கைகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.




