தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு இடைக்கால முதலமைச்சராக துரைமுருகனை நியமிக்க வேண்டும் – திருச்சியில் சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் வலிமையான கட்சியாக மாற வேண்டும். வலிமையான படையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு கருத்துக்களை ஆலோசனை செய்து வருகிறேன்.

பழனியில் முருகன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி என்பது ஏற்புடையது அல்ல. ஏனென்றால் தமிழரின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து கூறிக் கொண்டுள்ளது. ஆனால் குடமுழுக்கு தமிழில் இல்லை, அர்ச்சனை தமிழில் இல்லை. ஏன் அங்கு சமஸ்கிருதம் வரவேண்டும். எதிலும் தமிழ், எங்கேயும் தமிழ் என்று கூறுபவர்கள் தற்போது எங்கே போனார்கள். இந்த மாநாடு என்பது மக்களை ஏமாற்றி ஓட்டு அரசியலை செய்துள்ளார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற திட்டத்தை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம். சமூக நீதிப் பேசுபவர்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்களில் அர்ச்சனையை தமிழில் செய்ய வேண்டும். பழனியில் நடைபெற்ற முதல் மாநாடு ஒரு நிர்பந்தத்தின் காரணமாக நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடர்ந்து, தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், IPS பதவிக்கு மரியாதை கொடுக்காமல், திருட்டு ரயில் ஏறி வந்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். கொழுப்பு அதிகமாக உள்ளது. யாருடைய பணத்தில் மாதச் சம்பளம் வாங்கினார், அவர் வாங்கும் மாதச் சம்பளத்தில் என்னுடைய பணமும் உள்ளது.

- Advertisement -

IPS பதவிக்கு உரிய பணியை மேற்கொள்ள வேண்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு திமுக ஐடிவிங் சென்று பணியாற்றலாம். என்னை பிச்சை எடுப்பவர் என்று கூறுகிறார். என் கட்சி வளர்ப்பதற்காக நான் பொதுமக்களிடம், கையேந்தி கேட்கிறேன் அதில் இவருக்கு என்ன பிரச்சனை. நான் எஸ் பி வருண்குமார் இல்லத்திற்கு சென்று அவர் தந்தையிடமோ இல்லை மற்றவர்களிடமோ கையேந்தி நின்றேனா? இவர் எப்படி என்னை பிச்சைக்காரன் என்று கூறலாம். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை, இவர்களுடைய சந்ததிக்காக போராடி வருகிறோம். உங்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறோம்.

TNPSC தலைவராக தமிழர் சைலேந்திரபாபு ஏன் நியமனம் செய்யவில்லை. பிரபாகர் எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள். குறிப்பாக சைலேந்திரபாபுவை விட என்ன தகுதி உள்ளது பிரபாகருக்கு. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக பணியாற்றியவர் தான் இந்த பிரபாகர். இதிலிருந்தே தெரிகிறது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று.

தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று எங்களுடன் யார் இணைந்தாலும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். அனைத்து தொகுதிகளிலும் சமமாக அனைவருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும். குறிப்பாக புதியோர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்.

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயும் நானும் ஒரே நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளோம். அரசியலுக்கு வருவது எளிது அதை தக்க வைத்து தொடர்ந்து போராடி வெல்வது கடினம் என்று தம்பி விஜய் அவர்களுக்கு அறிவுரை ஏற்கனவே வழங்கி உள்ளேன். தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து தேர்தல் வரும் நேரத்தில் தம்பி விஜய் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் யார் துணை முதல்வர் என்ற கருத்துகள் பரவி வருகிறது. ஆனால் அண்ணா, பெரியார், கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவிற்கு உண்மையான தொண்டனாக இருப்பவர் மூத்த நிர்வாகி அனுபவங்கள் அதிகம் உள்ளவர் துரைமுருகன். ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு இடைக்கால முதலமைச்சராக துரைமுருகனை நியமிக்க வேண்டும். அதுதான் திமுக அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

எடப்பாடி பழனிச்சாமி அடிப்படை தொண்டனாக இருந்து கட்சியில் பதவிக்கு வந்துள்ளார். அவர் தற்போது உள்ளவர்களை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலி தான் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்