புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர் துரை வைகோ!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். திறந்தவெளி ஜீப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் திருவப்பூர் ரயில்வே கேட், கோவில்பட்டி, காட்டு மாரியம்மன் கோவில் தெரு, திருக்கோகர்ணம் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களை சந்தித்து தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.






தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்….
பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அம்னிஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மோடி கச்ச தீவு குறித்து வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளது அவருக்குள்ள நோய் உள்ளது உண்மை என்று காட்டுகிறது. அண்ணாமலை கூறுவது போன்று எங்களுடைய தலைவர் கலைஞர் கட்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை.
அவர் ஒரு ராஜதந்திரி, இந்த பிரச்சனையை இரண்டு வருட காலம் ஒத்தி போட முடியுமா என்று தான் கலைஞர் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம் அவருடைய வாரிசுகள் இதுவரை எந்தவிதமான சொந்தமும் கொண்டாடவில்லை.
சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து கச்சத்தீவு எனக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு.
இந்த பிரச்சனை இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. விரைவில் தமிழக அரசு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், கச்சத்தீவை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்.
பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதற்கு தான் அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர் என்றார்.




