நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொருப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் பொது மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் திருவெறும்பூர் வடக்கு மண்டல் பகுதியில் “டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் உடன் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்” என்ற தலைப்பில் வாக்காளர்களையும், நிர்வாகிகளையும் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்தித்தார். இதில் வடக்கு மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்கள் 13 பேர், பிரதமரின் மக்கள் நலத் திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் நான்கு பேர் மற்றும் மூன்று முக்கிய வாக்காளர்களை அவரவர் இல்லத்தில் நேரில் சந்தித்து அவர்களின் கடுமையான கட்சிப்பணியை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, தாமரை சுவரோவியம் அவர்களின் பகுதிகளில் அதிகப்படியாக வரைய ஊக்குவித்து, இனிப்புடன் பிரதமரின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவெறும்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.