தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திண்டுக்கல் சாலை கள்ளிக்குடி பகுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் மகேஷ்வரன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன், மாநில மகளிரணி செயலாளர் கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கிடையே மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்டு, இன்றுவரை தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய எந்த சலுகையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. குறிப்பாக ஓய்வூதியம் உட்பட எதுவும் வழங்கவில்லை. நாங்கள் இதற்காக 3 கட்ட போராட்டம் நடத்தி விட்டோம். ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரை நேரில் சந்தித்து ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த போது செய்து தருவதாக கூறியுள்ளார். இதை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கலாக உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பில் பட்டியலை விடுவித்துவிட்டு உங்களது ஊதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். எனவே நாங்கள் ஊதியம் பெறும் டி.என்.பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அவரவர் வங்கி கணக்கில் ஊதியத்தை நேரடியாக செலுத்த வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலநிலை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை எல்லாம் தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும். இல்லையெனில் மாநில அளவில் ஊரக வளர்ச்சி துறையில் பெரிய கூட்டமைப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய போராட்ட களத்திற்கு செல்வோம் என்றார்.
Comments are closed.