திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் இன்று தை அமாவாசை என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஏராளமான மக்கள் அதிகாலை முதலே ஒன்று கூடி வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மாம்பழச்சாலை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்காக சுமார் 50 க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.