திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது தாய் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது!
திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி (53) உள்ளார். இவரது மகன் சாம்சன் டேனியல் (31) திருச்சி மாவட்டம், லால்குடி சிறுமயங்கொடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தாய், பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பதால், அவ்வப்போது, சாம்சன் டேனியல், பள்ளி விடுதிக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், வெளியே சொல்வதற்கு தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி கோட்டை போலீசார் அந்த விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாம்சன் டேனியல் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சாம்சன் டேனியலை (31) நேற்று கைது செய்தனர். குற்றத்தை மறைத்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று, பின்னர் நீதிமன்றத்திற்கு உள்ளே உள்ள மகிளா நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது 9 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும், நீதிபதி விடுமுறையில் இருப்பதாகவும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் இருந்து இருவரையும் அழைத்துக் கொண்டு போலீசார், திருச்சி மாநகர பகுதிகளில் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் வந்தடைந்தனர். இன்று காலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து, செய்தியாளர்கள் அவரை புகைப்படம் எடுக்காத வண்ணம் தொடர்ந்து செயல்பட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், பள்ளி இருக்கும் இடம் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். போக்சோ வழக்கில் கைதான அரசு மருத்துவரை இப்படி ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்து நீதிமன்றத்தில் படுத்தாமல் சிறையில் அடைக்காமல் இருப்பது குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
Comments are closed.