காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்….
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் கர்நாடக அரசு, மாதந்தோறும் தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க வேண்டும். தங்களது அணைகளில் தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பது சட்டவிரோதமானது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உத்தரவிட்டும், தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க மறுப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
கர்நாடகம் தண்ணீர் திறக்காவிட்டால், தமிழகம் பாலைவனமாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை தினந்தோறும் 2 டிஎம்சி வீதம் கர்நாடகம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். காவிரி விஷயத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.