தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருச்சியில் இருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் பயணம் முடிந்து இன்று திருச்சி வந்தடைந்தனர்.
அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் வசதிகளை ஹஜ் கமிட்டி ஏற்படுத்தி தரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து ஹஜ் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்…




கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஹஜ் கமிட்டி மூலமாக 345 பேர் ஹஜ் பயணம் செய்தோம். பயணிகளுக்கு உதவியாக ஒரு குழுவிற்கு இரண்டு வழிகாட்டிகள் ஹஜ் கமிட்டி மூலம் நியமிக்கப்படுவார்கள். ஆனால் எங்களது விமானம் கடைசி விமானம் என்பதால் எங்களுக்கு வழிகாட்டிகள் நியமிக்கப்படவில்லை. போதிய அளவில் தங்கும் இடம் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை.
ஹஜ் கமிட்டி மூலம் சரியான வழிமுறைகள் இல்லை. பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 5 நாட்கள் எல்லையில்லா கஷ்டத்தை அனுபவித்தோம். நாங்கள் கொண்டு வந்த ஜம்ஜம் நீர், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இது குறித்து ஹஜ் கமிட்டி நிர்வாகிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர்களின் துணையோடு இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. தமிழக அரசு இதில் தலையிட்டு ஹஜ் கமிட்டியை முறைப்படுத்தி, முறையான நிர்வாகிகளை பணியமர்த்த வேண்டும்.
கேரளாவில் தன்னார்வ அமைப்புகளும், அரசாங்கமும் ஹஜ் பயணிகளுக்கு உறுதுணையாக உள்ளனர். அதுபோல தமிழக அரசும் இருக்க வேண்டும். தமிழகத்தில் துறை சார்ந்த அமைச்சர் ஹஜ் பயணிகளை வழியனுப்பும் போதும், வரவேற்கும் போதும் 10 ரூபாய் துண்டை அணிவித்து விட்டு சென்று விடுகிறார். லட்ச கணக்கில் பணம் செலுத்தியும் முறையான வசதிகள் இல்லை.
தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் எந்த சிரமமும் இன்றி அழைத்து செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் ஹஜ் கமிட்டி மூலம் செல்வது எந்த பலனும் அளிக்காது. தனியார் டிராவல்ஸ் மூலம் ஹஜ் பயணம் செய்ய மக்கள் விருப்பப்படுவார்கள். எனவே ஹஜ் கமிட்டியினர் செய்யும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

