அதிகாரிகளின் அலட்சியத்தால், வீணாகும் குடிநீர்! ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர் – திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, “பரமேசுவரபுரம்” கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது.

இவ்வாறு வீணாகி வரும் குடிநீரில், சிலர் பண்டம் பாத்திரங்களை கழுவியும், வேறு சிலர் மாடுகளை குளிப்பாட்டியும், இனனும் சிலர் இருசக்கர வாகனங்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், மெத்தனப்போக்கால், தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவது, மக்களிடம் வேதனையை, ஏற்படுத்தியுள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான், பரமேசுவரபுரத்தில் குடிநீர் விநியோகிக்கப் படுவதாக, இவ்வூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் கூட, இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதது, இங்குள்ள மக்களிடம் கோபத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக, பரமேசுவரபுரம் மக்கள் அறிவித்தனர்.


இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும், ராதாபுரம் காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து, குடிநீர் வழங்குவதற்கான முயற்சியினை மேற்கொண்டனர். இந்நிலையில் தான், பரமேசுவரபுரம் கிராமத்திற்கு வரும், தாமிரபரணி குடிநீர் விநியோகக்குழாயில், திடீரென உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒருவாரமாக, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, குடிநீரானது வீணாகி வருகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத, இந்த நேரத்தில்,மக்களுக்கு குடிநீர் வழங்காமல், அலட்சியப் போக்கை கடைபிடித்துவரும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பல லட்சம் லிட்டர் தண்ணீர், கீழே விழுந்து வீணாகி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, “இனியும் காலதாமதம் செய்யாமல், மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியன இணைந்து, உடனடியாக குடிநீர் விநியோகக்குழாய் உடைப்பை சரி செய்து, முறையாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என, பரமேசுவரபுரம் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments are closed.