திருச்சியில் லேப்டாப் வழங்கும் நிகழ்வில், திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜை புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு?
திருச்சியில் அமைச்சர் நேரு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு இல்லை?
அவர் தொகுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர், மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து, பொங்கல் பரிசு தொகப்பினையும் வழங்கினார்கள்.
அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலியார் சத்திரம், காஜா பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியுடன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டார். ஆனால் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூய வளனார் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜுக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுக தலைமை, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் உட்கட்சி பூசல் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் விழாவை நடத்தி இருப்பது பலரையும் திமுகவில் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திமுகவை பொருத்தவரை தனியார் விழாவோ, கட்சி நிகழ்வோ, அரசு நிகழ்வோ கட்சியினர் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் மற்றும் துக்க காரியங்கள் போன்றவை என்றால் அந்தந்த வட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட அமைச்சரோ, முக்கிய விருந்தினரோ அந்த வார்டுக்குள் செல்வார்கள். இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுபட்டு வருகிறது.
ஆனால் இன்று நடைபெற்ற லேப்டாப் வழங்கும் விழாவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கே அழைப்பு இல்லாமல் விழாவை நடத்தி முடித்து இருப்பது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட திமுகவை பொருத்தவரை மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் அமைச்சர் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தெற்கு மாவட்டம் அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அமைச்சர் கே.என்.நேருவுக்கும், மகேஷுக்கும் இடையே சரியான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது,
இந்த போட்டியின் காரணமாக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற லேப்டாப் விழாவிற்கு எம்.எல்.ஏ இனிகோவுக்கு திட்டமிட்டு அழைப்பிதழ் அனுப்பாமல் அமைச்சர் கே.என்.நேருவால் புறக்கணிக்கப்பட்டாரா என்று திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட திமுகவினர் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் அவர்களின் ஆதரவாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Comments are closed.