பாஜக அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.பி.ஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்யும் பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது ஜுன் 4 ஆம் தேதி அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி, இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்யும் பாஜக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மெக்டொனால்ட்ஸ் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

