போதைப்பொருள் புழக்கத்தால் பொது மக்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை – ஜிகே.வாசன் அறிக்கை!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப்பொருளால் கொலை, மரணம், தாக்குதல் என 3 தொடர் சம்பவங்கள் நடைபெற்றதற்கு காரணம் அரசின் மெத்தனப்போக்கே. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை தமிழக அரசு உணர வேண்டும்.
காரணம் மாநிலத்தில் ஆங்காங்கே போதைப்பொருள் விற்பனையும் கடத்தலும் நீடிப்பது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிகிறது. மேலும் சில பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் கூட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளைப் பயன்படுத்தி வீன் சண்டை, தகராறு, பாலியல் தொந்தரவு என சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது சரியல்ல.
குறிப்பாக கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதால் மனைவி, மாமனார் கொலை செய்யப்பட்டதும், கல்லுரி மாணவி மரணம் அடைந்ததும், பேருந்து ஒட்டுநர் தாக்கப்பட்டதும் நடந்துள்ளது. இதெல்லாம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி போதைப்பொருளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதற்கு தமிழக அரசின் பதில் என்ன? போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை நிலை.
போதைப்பொருள் நடமாட்டத்தால் தமிழகத்தில் பொது மக்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. எனவே தமிழக அரசு, தமிழக மக்களின் நலனை முக்கிய கவனத்தில் கொண்டு போதைப்பொருள் விற்பனை இல்லை,
போதைப்பொருளை யாரும் பயன்படுத்தவில்லை என்ற நிலைக்கு தமிழகத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.