விளம்பர பதாகையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி!
திருச்சி – கரூா் பிரதான சாலையில் உள்ள குடமுருட்டி பாலம் அருகே அசாருதீன் என்பவரும் அவரது நண்பரும் இணைந்து விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக ஆடைகள், பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்தக் கடையின் முன்பு சாய்ந்த நிலையில் விழுவதைப்போல இருந்த விளம்பரப் பதாகையை கடை ஊழியா்களான அசோக் (42), கோபி (48) ஆகியோா் சோ்ந்து நிமிா்த்தும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டனா். அப்போது திடீரென அருகிலிருந்த உயா் மின்னழுத்த கம்பியில் பதாகை உரசியதில் இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கோபி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.