அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி குமரன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….
1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார். இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எங்கள் கட்சியின் கொள்கையை புரட்சித் தலைவர் வகுத்தார். கட்டுப்பாடுகளை புரட்சி தலைவி வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்த ‘ஜெ’ அவர்களே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
கட்சியை வளர்த்தவர்களுக்குதான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்.
சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார். டி.டி.வி தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச இயலும் என கேள்வி எழுப்பினார்.