திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் சூறாவளி பிரச்சாரம்!
மக்களவைத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் வழங்கிய நீர் மோர், பானாக்கம் ஆகியவற்றை வாங்கி பருகி வாக்கு சேகரித்தனர். கோயில் முன்பாக மலர் கடைகள் அமைத்திருந்த பெண்களிடமும், பொது மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வேட்பாளர் கருப்பையா வாக்குகள் சேகரித்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகளான அடப்பன் வயல், வடக்கு 3ஆம் விதி, வடக்கு நான்காம் விதி, வ உ சி நகர், பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செல்லும் இடங்களில் எல்லாம் வேட்பாளருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.