திருச்சியில் மின்சார ரயில் சேவை தொடங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாபன், பாபா பாலாஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தினந்தோறும் மக்கள் அன்றாட வேலைக்கு செல்லும் போது பயணம் செய்வதில் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். திருச்சியில் மத்திய, மாநில அரசுகள் மூலமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் அதில் வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய முடியும். எனவே சென்னையைப் போன்று திருச்சி மாவட்டத்தை சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மின்சார ரயில் சேவை திட்டத்தை கொண்டு வரும் பட்சத்தில் அன்றாட கூலித் தொழிலாளர்களும், நடுத்தர மக்களும், பள்ளி மாணவர்களும் மிகுந்த பயனடைவார்கள். இதற்கு குறைந்த கட்டணம் வசூலிப்பதால் மக்களுக்கும் சிரமம் இருக்காது. ஆகவே மின்சார ரயில் சேவை கொண்டு வருவதற்கு தாங்கள் மத்திய, மாநில அரசுகள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

