காங்கிரஸ் பொதுச்செயலாளரை பணம் கேட்டு மண்டையை உடைத்த கோட்ட தலைவர் – நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு!
திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35). திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,…

காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நேற்று நடந்த தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது சிறப்பு விருந்தினரை வரவேற்க மன்றத்தின் வாசலில் காத்திருந்தபோது அங்கு டூவீலரில் வந்த காங்கிரஸ் மாநகர் மாவட்ட கோட்ட தலைவர் தென்னூர் ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (36) என்பவர், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக என்னை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டினார். மேலும் என்னையும், எனது தாய், சகோதரியையும் தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் பேசியது:
எனது உழைப்பால் காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக வளர்ந்து வருகிறேன். எனக்கும் ஸ்ரீ ராகவேந்திரா என்பவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை, அரசியல் ரீதியாகவும் நான் வகிக்கும் பதவி மீது அவருக்கு இருக்கும் வெறுப்புணர்ச்சியே இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக தொலைபேசி மூலமாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவ்வப்போது சில பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளதாக பொய்யான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார். இதுகுறித்து திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ரெக்ஸ் அவர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. மாறாக என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஸ்ரீ ராகவேந்திரா என்பவருக்கு பதவி உயர்வு கொடுத்தது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒருவேளை திருச்சி மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் ரெக்ஸ் ஸ்ரீ ராகவேந்திராவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டியும், ஸ்ரீ ராகவேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் புகார் கடிதம் அனுப்ப உள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.





Comments are closed.