திருச்சியின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் முக்கியமானது மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தாயுமான சுவாமியை தரிசித்து வருகின்றனர். இக்கோவிலில் கடந்த சில வருடங்களாக அறங்காவலர் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமன உத்தரவை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷின் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன், திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி, மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கலைச்செல்வி, திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஐந்து பேருக்கும் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் லட்சுமணன், அறங்காவலர் குழு தேர்தலை நடத்தி அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுத்தார். அதனைத் தொடர்ந்து 5 பேரும் இன்று கோவில் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் அனிதா, திருச்சி மாநகர திமுக செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழுத் தலைவருமான மதிவாணன், துணை மேயர் திவ்யா , மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா மற்றும் திமுக பகுதி செயலாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
Comments are closed.