திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்கில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு சங்கர் – மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!
சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதையடுத்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசு தரப்பில் காவல்துறை விசாரணைக்காக அவர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முல்லை சுரேஷ் இந்த வழக்கில் கைது செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சவுக்கு சங்கரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மீண்டும் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்….
மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு கடந்த 4 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து, இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எங்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தோம். ஒரு வழக்கில் ஆதாரம் இருந்தால் அதற்காக கைது செய்யலாம் ஒரு குற்றத்திற்காக பல வழக்குகள் போடக்கூடாது என பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறினோம்.
ஒரு வழக்கில் ஒரு புகார்தாரர் புகார் கொடுத்த பின்பு வேறு புகார் அந்த வழக்கு தொடர்பாக வந்தால் அந்தப் புகார்தாரர் சாட்சியாக தான் சேர்க்க வேண்டும். புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என இருந்த வழக்கை உதாரணமாக எடுத்து வாதிட்டோம்.
நீதிபதி கேட்டறிந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும் சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.
எனவே இந்த வழக்குக்கு அவர் ஜாமீன் கேட்க தேவையில்லை. இனி விசாரணைக்கு ஆஜரானால் மட்டும் போதும். திருச்சியை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.