திருச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது!
தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18-வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் ஆகியவை ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலிருந்தும் நேற்று ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு “ஸ்ட்ராங் ரூம்” எனப்படும் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை, திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் வேட்பாளர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்….
மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துனை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். ஒரு வேட்பாளர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக புகார் வந்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு.. அப்படி புகார் இருந்தால் அதற்குரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.