மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
பாஜக மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை கருவியாக கொண்டு சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறது. இந்த அபாயத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது எனவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடுப்பது எனவும் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மேலும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் வேளையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது சமூக நீதியாகும். 2024 மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டால், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்கவைத் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயம் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும். தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தோல்வி பயம் பாஜகவுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. எனவே, அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஐஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.