பாராளுமன்ற தேர்தலில் திருச்சி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் – ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் திருச்சியில் பேட்டி!
ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் நாகேஸ்வரன் தொண்டைமான் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற வைக்க பாஜக உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கூறுகையில்….
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தொடர்ந்து பாஜக கூட்டணியில் தென் மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜக கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக மாநில தலைவர்களுடன் பேச்சு வார்த்தையை நடத்தி உள்ளோம். தொடர்ந்து தேசிய தலைவர்களுடனும் பேசி வருகிறோம். கண்டிப்பாக இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணியில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும் என தெரிவித்தார்.