11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் ஒரு லட்சம் நாமாவளிகள் பிரார்த்தனை செய்தார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச்
4 ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகள் அச்சமின்றி தேர்வினை எழுதவும், ஞாபக மறதி நீங்கவும், பொதுத்தேர்வினை எழுதும் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும், ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமங்கள் ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி ஆலயத்தின் பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெறவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், நாட்டின் எதிர்கால சக்திகளாக அவர்கள் திகழ வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே தியான பீடத்தில் அமர்ந்தபடி ஒரு லட்சம் நாமாவளிகள் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினார்.