திருச்சி ஸ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகள் குறித்து தவறாக விமர்சனம் செய்யும் கவர்னரை கண்டிப்பதாகவும் கூறி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் இன்று திருவானைக்காவல் பகுதியில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, மோகன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, பகுதி செயலாளர்கள் தர்மா, சுரேஷ், வேலுச்சாமி உள்ளிட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். அதோடு, இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட இன்னும் பலரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் திருவானைக்காவல் பகுதியில் பரபரப்பு நிலவியது.