திருச்சியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி – செயல் இயக்குநர் கார்த்திகேயன் பங்கேற்பு!
இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கு – பேங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேட்டி.
பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மதுரை மண்டலம் சார்பாக பெண்கள் மேம்பாடு திட்டம் குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மதுரை மண்டல மேலாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் குழுவினருக்கு ஐந்து கோடிக்கணக்கான காசோலை மற்றும் மகளிர் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
பேங்க் ஆப் இந்தியா 118 வருடமாக தேசிய அளவில் 5132 கிளைகளை கொண்டுள்ளது. 2023 – 2024 முதல் காலாண்டில் 1551 கோடி லாபம் பெற்றுள்ளோம். இரண்டாம் காலாண்டில் 1498 கோடி நிகர லாபம் பெற்றுள்ளோம். இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளோம். அதற்காக 70 க்கும் மேற்பட்ட திட்டங்களை வைத்துள்ளோம். பேங்க் ஆப் இந்தியா தனது ஐடி துறைக்கு 25 கோடி செலவு செய்துள்ளது. தற்பொழுது பேங்க் ஆப் இந்தியா புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் 12 கோடிக்கு மேல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் பண பரிவர்த்தனை, முதலீடு போன்றவை சுலபமாக செய்யலாம்.
தற்பொழுது சென்னை தெற்கு மண்டலத்தில் 75 கோடியும், மதுரை மண்டலத்தில் 25 கோடியும் கடன் வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.










