கோலி, ராகுல் டி20 ரெக்கார்டை காலி செய்த ருதுராஜ் – அதிவேக 4000 டி20 ரன்கள் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ; விராட் கோலி, ராகுல் சாதனையை முறியடித்து புதிய டி20 சாதனை படைத்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதி வேகமாக 4000 டி20 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ்.
விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்து இந்திய அளவில் வரலாறு படைத்துள்ளார் ருதுராஜ். மேலும், சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணியில் சமீபத்தில் தான் இடம் பெற்று வருகிறார். அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக ரன் வேட்டை நடத்தி வருகிறார். துவக்க வீரரான அவர் தற்போது இந்திய அணியில் முக்கியத்துவம் பெறத் துவங்கி இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் சதம் அடித்து இருந்த ருதுராஜ், நான்காவது டி20 போட்டியில் 20 ரன்கள் சேர்த்த போது அவர் ஐபிஎல், சர்வதேச டி20 உள்ளிட்ட ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சேர்த்து 4000 ரன்களை கடந்தார். அவர் இந்த மைல்கல்லை 116 இன்னிங்ஸில் கடந்தார். அதன் மூலம், குறைந்த இன்னிங்க்ஸில் 4000 டி20 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.
ராகுல் 117 இன்னிங்ஸிலும், விராட் கோலி 138 இன்னிங்க்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டி இருந்தனர். சர்வதேச அளவில் கிறிஸ் கெயில் 107 இன்னிங்ஸ், ஷான் மார்ஷ் 113 இன்னிங்ஸ், பாபர் அசாம் 115 இன்னிங்ஸ், டெவான் கான்வே 116 இன்னிங்ஸில் இதே மைல்கல்லை எட்டி உள்ளனர். நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரை 3 – 1 என இந்தியா கைப்பற்றி உள்ளது.