சமயபுரம் பள்ளியில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ சார்பாக மாணவர்களுக்கான பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சமயபுரம் பள்ளியில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ சார்பாக மாணவர்களுக்கான பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சமயபுரம் / திருச்சி:

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் திருமதி ஜோதிலட்சுமி அவர்கள் தலைமையில் மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. இரா. செல்வம், சமூக நலத்துறை பிரதிநிதி திரு. பிரபு மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையைச் சேர்ந்த திருமதி யோகப்ரியா, திருமதி சினேகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் போதைப்பொருட்களால் வரும் தீமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழிகள் மற்றும் சுய ஒழுக்கத்தைப் பேணும் முறைகள் குறித்து மிகச் சிறப்பான விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
முன்னதாக, பள்ளி ஆசிரியை திருமதி அமலோற்பவ மேரி சலுஜா அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட முக்கிய விழிப்புணர்வு அறிவுரைகள்:
1. பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள்:
உடனடி எதிர்ப்பு: பொது இடங்களிலோ அல்லது சாலைகளிலோ யாரேனும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ, பழக முற்பட்டாலோ அல்லது கேலி கிண்டல் செய்தாலோ அச்சப்படாமல் கூச்சலிட்டு உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
அவசர உதவி எண்கள்: ஆபத்து காலங்களில் உடனடியாக 1091 (பெண்கள் உதவி எண்) அல்லது 1098 (குழந்தைகள் உதவி எண்) ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு பெற வேண்டும்.
அறியாத நபர்களிடம் எச்சரிக்கை: முன் பின் தெரியாத நபர்கள் “வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்” என்று அழைத்தாலும் அவர்களது வாகனங்களில் கண்டிப்பாகச் செல்லக் கூடாது.
தவறான தொடுதல் மற்றும் அச்சுறுத்தல்: உறவினர்களோ, அண்டை வீட்டாரோ அல்லது முன்பின் தெரியாதவர்களோ தவறான முறையில் தொடுவதையோ அல்லது தொல்லை தருவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இது குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் உடனடியாகக் கூற வேண்டும்.
தற்காப்பு கலைகள்: எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெண் குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வது அவசியம்.

பரிசுகளுக்கு மயங்கக் கூடாது: பிடித்தமான பொருட்களை வாங்கித் தந்து தவறான வழியில் வழிநடத்த முயல்பவர்களைப் பற்றி பெற்றோரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
2. இணையவழி (Cyber Crime) பாதுகாப்பு விழிப்புணர்வு:
சமூக வலைதளப் பயன்பாடு: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தவறாகப் பேசினாலோ அல்லது அச்சுறுத்த நினைத்தாலோ உடனடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை / காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும்.
தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு: வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் வரும் தேவையற்ற லிங்குகளை (Links) திறக்கக் கூடாது. வங்கி கணக்கு எண், பிறந்த தேதி போன்ற ரகசிய விவரங்களை யாருடனும் பகிரக் கூடாது.
பயனுள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தல்: கொக்கு எவ்வாறு ஒற்றைக் காலில் காத்திருந்து தனக்கான உணவைப் பெறுகிறதோ, கோழி எவ்வாறு மண்ணைக் கிளறி தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ, அதுபோல மாணவர்கள் சமூக வலைதளங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றதை விலக்க வேண்டும்.
3. குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு:
சட்டப்பூர்வ திருமண வயது: பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18, ஆண்களுக்கு 21. குறைந்த வயதில் யாருக்காவது திருமணம் நடைபெற்றால் உடனடியாகச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை / காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பாதிக்கப் பட்டாலும் 1091 அல்லது 1098 எண்களை அழைக்கலாம்.
போதைப்பொருட்கள் தடுப்பு: ஹான்ஸ், குட்கா, கூலிப் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. போதைப்பொருட்கள் விற்கும் இடங்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாகக் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
4. பள்ளி ஒழுக்கம் மற்றும் முக்கிய அறிவுறுத்தல்கள்:
நேரடியாக இல்லம் செல்லுதல்: பள்ளி முடிந்தவுடன் கடைவீதிகளிலோ அல்லது வேறு இடங்களிலோ சீருடையுடன் சுற்றித் திரியாமல் உடனடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
செல்போன் தடை: பள்ளிக்குச் செல்போன்களைக் கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது.
சுய ஒழுக்கம்: தலைமுடியைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நன்கு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
விரைவில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களின் பைகளை ஆய்வு செய்யவும், ஒழுக்க நடைமுறைகளைச் சோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களை நல்வழிப்படுத்த மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்த இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் சிறந்த முறையில் செய்திருந்தார்கள். நிறைவாக, தலைமை ஆசிரியர் திரு. இரா. செல்வம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
#Samayapuram #SingapenSirippuAthiradai #Singapennae #ChildSafety #CyberSafety #StudentsAwareness #WomenSafety #Childline1098 #Helpline1091 #SayNoToDrugs #CyberCrimeAwareness #SchoolDiscipline #SafetyFirst #TrichyNews





Comments are closed.