நெல்லைக்கு நற்செய்தி! பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை,சென்னை அப்பல்லோ – நெல்லை ராயல் மருத்துவமனை
நெல்லைக்கு நற்செய்தி! பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை,சென்னை அப்பல்லோ – நெல்லை ராயல் மருத்துவமனை

சென்னை “அப்பல்லோ” மருத்துவமனை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை பெருமாள்புரம், “ராயல்” குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து, பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும், பிறவி இதய நோய்களுக்கான அனைத்து விதமான சிகிச்சைகளையும், குறிப்பாக இதய அறுவை சிகிச்சைகளையும், இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நற்செய்தி, “அப்பல்லோ” மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு இன்று [ஆகஸ்ட்.2] மாலையில், “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” [NELLAI PRESS CLUB] கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற, செய்தியாளர் கூட்டத்தில், வெளியிடப்பட்டது.

இந்த புதிய கூட்டு முயற்சியின் மூலம், அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள், திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள “ராயல்” குழந்தைகள் மருத்துவமனையில், இனி எந்நேரமும் வீற்றிருந்து, பெற்றோர்களின் அணுகு முறைகளுக்கு, அறிவுரைகளையும்- ஆலோசனைகளையும் வழங்குவர்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைகள் முதல், சிக்கலான அறுவை சிகிச்சைகள் வரையிலான அனைத்து சேவைகளும், இங்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே, அப்பல்லோ மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து சிறு குழந்தைகளின் இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சைகளையும், இலவசமாக செய்து வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கதாகும். இந்த சேவைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் இதய நோய் குறித்து பேசிய, அப்பல்லோ மருத்துவர்கள், “கருவில் இருக்கும்போதே, குழந்தைகளுக்கு இதய பாதிப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிவதின் முக்கியத்துவத்தையும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களுக்கு ஏதேனும் இதய நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதனை செய்வதன் அவசியத்தையும், வலியுறுத்தினர். மேலும், தற்போது குழந்தைகளின் இருதய நோய் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளின் தரம், உலக அளவில் மிகவும் மேம்பட்டுள்ளதாகவும், அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் சுமார் இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் வரை, குழந்தைகள் பிறவி இதய நோயால் (congenital heart disease) பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் கூறினர். குழந்தைகளில் “நீல நிற குழந்தைகள்” (Blue Babies) என அறியப்படும் குழந்தைகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு, சரியாக பால் குடிக்க முடியாமை மற்றும் அதிக வியர்வை போன்றவை உண்டாகும். இவையே, இதய நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இதயப் பிரச்சனை இருந்தால், உடனடியாக நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். நோய் கண்டறியப்பட்டால், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற முடியும். அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைகளில் கூட, சரியான நேரத்தில் செய்யும்போது நல்ல முடிவுகள் கிடைக்கும்! என்றும், அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் ரத்த நாளங்களைப் பாதிக்கப்படுவதும் கூட, இதய நோய் ஏற்படுவதற்கான, காரணமாக அமைகிறது என்றும், “ஜங்க் ஃபுட்” போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்றும், மருத்துவர்கள் தெரிவித்தனர். சில பிறவி இதய நோய்கள், பரம்பரை அல்லாதவை என்றாலும் கூட, சில சமயங்களில் அவை மரபுவழி காரணமாகவும் இருக்கலாம்! என்பதையும் அவர்கள், தெளிவுபடுத்தினர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இதய சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் குழந்தைகள், அவர்களுடன் வரும் பெற்றோர்கள் அனைவருக்கும், தங்குமிடம், உணவு வசதிகள் போன்றவை, “அப்பல்லோ” மருத்துவமனை நிர்வாகத்தால், கட்டணமின்றி வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய குழந்தைகளின் இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்! என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், அப்பல்லோ மருத்துவ மனையின், பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர் டாக்டர் ராகுல் யாதவ், சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் நெவில் சாலமன், டாக்டர் சி. எஸ். முத்துக்குமரன், டாக்டர் சரண்யா, மற்றும் ராயல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம் கிஷோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள,சீனியர் மேலாளர் மற்றும் டி.ராஜ்குமார் ஆகியோரை, 9840844392 அல்லது 7401680253 ஆகிய செல்போன் எண்களில்
தொடர்பு கொள்ளலாம்! என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed.