திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம் – 4 ஆயிரம் பேர் பங்கேற்பு!
திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இரண்டாம் ஆண்டு போட்டி இன்று காலை நடைபெற்றது.
திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள மாணவர்கள் சாலையில் இருந்து இந்த மாரத்தான் போட்டியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் அன்பு, மொராய்ஸ் சிட்டி நிர்வாக இயக்குனர் லெரோன் மொராய்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியானது
மாஸ்டர் பெண்கள் பிரிவு, ஆண்கள் பிரிவு, பள்ளி மாணவிகள் பிரிவு, மாணவர்கள் பிரிவு, சீனியர் பெண்கள் பிரிவு, சீனியர் ஆண்கள் பிரிவு, கல்லூரி மாணவிகள் பிரிவு, கல்லூரி மாணவர்கள் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.
மாரத்தான் ஓட்டம் நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக மொராய்ஸ் சிட்டி, மொராய்ஸ் கிளாரியானில் முடிவடைந்தது.
இதில் மாஸ்டர் பெண்கள் பிரிவில் லதா, கோகிலா, பிரியா, ஆண்கள் பிரிவில் டாக்டர் வினோத், ஆல்பர்ட் வில்லியம், கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளி மாணவிகள் பிரிவில் யுவா, சதா, லலிதா, மாணவர்கள் பிரிவில் விகேஷ் ராஜ், லோகேஸ்வரன், ரோஹித், சீனியர் பெண்கள் பிரிவில் யாழினி, சரண்யா, மாலதி, ஆண்கள் பிரிவில் ரங்கராஜ், சந்தோஷ் குமார், கவியரசன், கல்லூரி மாணவிகள் பிரிவில் வைஷ்ணவிகா, மாரியம்மாள், வினோதினி, ஆண்கள் பிரிவில் லட்சுமணன், செல்வேந்திரன், ரவிவர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மொராய்ஸ் சிட்டி சார்பில் காசோலை வழங்கப்பட்டது.