டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் திருச்சியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்!
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து கடந்த 10 ஆம் தேதி இரவு திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.
தொடர்ந்து ரயில் மூலம் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் நேற்று மதியம் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் மீது பெண்களை இழிவு படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என கூறி வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்தபின் நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை காண வேண்டும் என கூறினார். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வரும் 27.05.2024 வரை பெலிக்ஸ் ஜெரால்டை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி நீதிமன்றத்தில் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி சவுக்கு சங்கர் வழங்கிய நேர்காணலை பார்த்துவிட்டு பின்னர் அவருக்கு 27.5.2024 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் போடப்பட்டுள்ளது.
இவருக்கும் குண்டாஸ் போடுவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு,,,,
தற்போது அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் அவர் மேல் பதியப்பட்டாலும் ஒரு வழக்கு மட்டுமே அவருக்கு பிணை வழங்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை பிணை வழங்கும் வகையில் உள்ளது. காவல்துறை தனக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 167 பிரிவின் படி கைது செய்யப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என உள்ளது. ஆனால் அவர் அரசியல் பின்புலம் இருப்பதால் அவரை கொண்டு செல்லும்போது கூட்டம் திரளும் என காவல்துறையினர் தெரிவித்தனர். சவுக்கு சங்கர் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் காவல்துறையினர் தங்களது ஆதங்கத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர் என கூறினார்.